பருவத்தே பயிர் செய்.

Paruvathe Payir Sei

எச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்ய வேண்டும்
Never procrastinate without reason.

பருவத்தே பயிர் செய்

பருவநிலை மாற்றங்களை அறிந்து எந்த பருவத்தில் எதை பயிர் செய்தால் விளைச்சல் கைகூடி வரும் உழைப்புக்கு பலன் கிட்டும் என்பதை தெரிந்து பயிர் செய்ய வேண்டும் என்கிறது இந்த பாடல்.

இதற்கு நெற்பயிரை ஒரு சிறந்த உதாரணமாக கொள்ளலாம். நெற்பயிரில் பல ரகங்கள் உள்ளன. இப்பயிரை விளைவிக்க, ரகத்திற்கு ஏற்றாற்போல் மூன்று முதல் ஆறு மாதங்கள் தேவைப்படுகிறது. பருவநிலைக்கு ஏற்றாற்போல், ஒரு வருடத்தை மூன்று போகங்களாக பிரிக்கப்பட்டு பயிர் செய்யப்படுகிறது. சித்திரையில் நாற்று நடுதல் சொர்ணவாரி என்றும், ஆவணியில் ஆரம்பித்தல் சம்பா போகம் என்றும், தையில் நடவு செய்தல் கார் போகம் என்றும் பிரித்து சிறப்பாக தமிழகத்தில் காலம் காலமாக பயிர் செய்யப்படுகிறது. இச்சிறப்பிற்கு முத்தாய்ப்பாக சம்பா போகத்தில் பயிரிட்ட நெல்லை அறுவடை செய்தே பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

சம்பா போகத்தின் சிறப்பை சற்று விரிவாகவே இங்கு காண்போம். ஆடி மாதத்து பலத்த காற்று மாறி, மேன்மையான தென்மேற்கு பருவ காற்றாக மாறும் ஆவணியிலே இதற்கு நடவு செய்யப்படுகிறது. இந்த நடவிற்காக, ஆடி மாதத்தில், அதிலும் குறிப்பாக, ஆடிப்பெருக்கன்று விதை விதைக்கப்படுகிறது. புரட்டாசியில் காற்று கரைந்து, ஐப்பசியில் மழை பொழியும். கார்த்திகையில் அடை மழையாய் மாறி, மார்கழியில் மழை முடிந்து பனிமூடி, தை மாதம் ஆரம்பிக்கும்முன் அறுவடை செய்யப்படுகிறது. ஆகையாலே, உழவர் திருநாளாம் தை திருநாள் (பொங்கல்) தை மாதத்தில் புது நெல் குத்தி, புத்தரிசியில் பொங்கலிட்டு கொண்டாப்படுகிறது.

இவ்வாறு இயற்கையை அறிந்து பருவத்தோடு இணைந்து பயிர் செய்ய வேண்டும் என்று உணர்த்தும் இந்த பாடலை, பொதுமறை கருத்தாக பயன்படுத்துவது வழக்கு. இளமையிலே கல்வி கற்றுக்கொள்ள வேண்டும், உரிய வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பலவற்றை உணர்த்த பயன்படுகிறது. மேலும் இப்பாடலின் மூலம் உரைக்கப்படுவது, காலத்தோடு செய்யவேண்டிய செயலை காலம் கடத்தி செய்வதம் மூலம், அச்செயலுக்கு கிடைக்கவேண்டிய பலன் முழுமையாக கிடைக்காமல் போகலாம் என்பதேயாகும்.

இந்த விளக்கவுரையை எங்ஙனம் முடிக்க என்று நான் விழிக்க, இதோ ஒரு உழவனின் அனுபவ வரி – “சம்பாவில் பயிரிட்டால் மட்டும் போதும், விளைச்சல் வீடு வந்து சேரும்”.


Classes
Quiz
Videos
References
Books