அறம் செய விரும்பு

Aram seya virumbu

அறம் செய விரும்பு
Desire doing righteous deeds

பொருள் விளக்கம் :
“அறம் செய விரும்பு” என்ற மிக உயர்வான பொருள் படும் இந்த வார்த்தைகளே மிகவும் சிறப்பான பொருள் விளக்கம்.

கடல் போன்ற விரிந்த பொருள் கொண்ட இந்த செய்யுளில் இருந்து ஒரு முத்தாக சொல்லுவதென்றால் “தனி மனித ஒழுக்கம்” கடைப்பிடிக்க விரும்பு.

வியாக்கியானம்:
ஆழ்ந்த சிந்தனையும் நிலைத்த தேடலும் அவசியம் என்பதை உணர்த்தும் சொல் “அறம்” – இது தான் என்று வரையறுக்க முடியாதது. இப்படி கூறுவது சரி தவறு என்ற விவாதத்தை தவிர்த்தபின் – " சூக்கும வடிவத்தில் கடவுள் என்றால் செயல் வடிவத்தில் அறம்".

ஆத்திகத்தில் கடவுள் அறம் எனில் , நாத்திகத்தில் கடவுள் இல்லை என்பதும் அறம்.

நெறி:
கீழே சொல்லப்பட்டுள்ள சிறுகதையில் ஒரு சுமைதாங்கி கல் எழுப்ப பொருள் உதவி என்பதை உதவி செய்வது என்று கொள்ளலாம். இங்கே அறம் என்பது “ஒரு காரியம் (இங்கே உதவி) நன்மை பயக்கும் என்னும் தருணத்தில் செய்துவிடவேண்டும் அதை தவிர்க்க கூடாது” என்று பொருள் கொள்ளலாம்.

சிறுகதை – சுமைதாங்கி (தொகுப்பு நூல்: ஆத்திசூடி அறநெறி கதைகள் – நா.மகேசன்):
வில்லூர் என்பது ஒரு சிறு கிராமம். அங்குள்ள மக்கள் விவசாயம் செய்து தமது வாழ்க்கையை நடத்தினர். மென்னாகம் ஊரில் உள்ள பெரிய சந்தையில் விளை பொருட்களை விற்பார்கள். இது ஆறு மைல் தொலைவில் இருந்தது. இங்கு பல ஊர்களிலும் இருந்து வியாபாரிகள் வந்து பொருட்களை வாங்குவர்.

வில்லூர் மக்கள் மென்னாகம் சந்தைக்கு பொருட்களை வண்டிகளிலும் தலைச் சுமையாகவும் எடுத்து செல்வர். பலர் வறியவர் என்பதால் அவர்களுக்கு மாட்டுவண்டிகள் கிடையாது. அதிகாலையில் எழுந்து தலைச் சுமைகளுடன் தெருவிலே நடந்து செல்வது அன்றாட காட்சியாகும். சந்தை கூடும் முன்பே போய்விட வேண்டும் என்பதற்காக பலர் ஓட்டமும் நடையுமாக களைப்புடன் செல்வார்கள்.

இப்படி செல்லும் மக்கள் நடுவழியிலே களைத்துவிட்டால் தமது சுமைகளை இறக்கிவைத்துச் சிறிது களைப்பு ஆறிப்போக விரும்புவர். ஆனால் எல்லோரும் தலைச் சுமைகளோடு போவதாலும், வேறு வழிப்போக்கர்கள் இல்லாததாலும் தமது சுமைகளை இறக்கி வைக்க வசதி இல்லாமல் அவதிப்படுவர். இதற்காக வழியில், ஓர் இடத்தில் சுமைதாங்கியை கட்ட வேண்டும் என்று மக்கள் முடிவு செய்தனர். சுமைதாங்கி தெரு ஓரத்தில் இருந்தால், அதன்மேல் தலைச்சுமையை பிறருடைய உதவி இல்லாமல் இறக்கி வைக்கலாம். மேலும், மற்றவர்கள் உதவி இல்லாமல் தலையில் ஏற்றிக்கொண்டு செல்லலாம்.

வில்லூர் மக்கள் சுமைதாங்கியை கட்ட தமது கிராமத்தில் உள்ளவர்களிடம் பணம் திரட்டினார்கள். அவ்வூரில் புண்ணியமூர்த்தி என்ற ஒரு பணக்காரன் இருந்தான். அவனிடமும் மக்கள் பணம் கேட்டனர். அவனோ “நான் சுமைதாங்கியை உபயோகிக்கப் போவதில்லை” என்று சிறிதும் தர்ம சிந்தனை இல்லாமல் மறுத்துவிட்டான். மக்கள் வேண்டிய பணத்தை திரட்டி சுமை தாங்கியை கட்டி முடித்தனர். பலரும் அந்தச் சுமைதாங்கியை உபயோகித்து களைப்பாறி கொண்டனர்.

வருடங்கள் பல சென்றன. புண்ணியமூர்த்தியின் வியாபாரம் நட்டம் அடையலாயிற்று. அவனிடம் இருந்த பணம், பொருள் எல்லாம் கடனுக்காக விற்கப்பட்டன; வறியவனானான்.

கூலி வேலை செய்யும் நிலையை அடைந்தான். ஒருநாள் அவன் கூலிக்கு பொருள் சுமக்க வேண்டி இருந்தது. பெரிய ஒரு சுமையை சுமந்து மென்னகாம் சந்தையில் கொடுக்க வேண்டும். அப்படி செல்லும் பொழுது களைத்துவிட்டான். சுமையை கீழே இறக்கி வைக்க ஒருவரும் வரமாட்டார்களா என்று ஏங்கினான். அப்பொழுது தெரு ஓரமாக இருந்த சுமைதாங்கி அவன் கண்களிலே பட்டது. தலைச்சுமையை இறக்கி வைத்துவிட்டு “அப்பனே ஆண்டவா” என்று ஒரு பெருமூச்சு விட்டான்.

சுமைதாங்கியிற் பொறிக்கப்பட்டு இருந்த எழுத்துக்களை புண்ணியமூர்த்தி பார்த்தான். அதிலே “அறம் செய விரும்பு” என்று எழுதப்பட்டு இருந்தது. கண்கள் கலங்கின. “இந்த சுமை தாங்கியை கட்டுவதற்கு பணம் கேட்டார்களே, நான் இது எனக்கு உதவாது என்று மறுத்துவிட்டேனே. எனக்கு இல்லாவிட்டாலும் மற்றவர்களுக்கு உதுவுமே என்ற நல்ல எண்ணம் இல்லாமல் இருந்தேனே. நான் பாவி, இனிமேலாவது தர்ம காரியங்களைச் செய்ய பின்னிற்கக் கூடாது” என்று தனக்குள்ளே கூறிக்கொண்டான்.


Classes
Quiz
Videos
References
Books