கடவுள் வாழ்த்து

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

ஆத்தி்சூடி முன்பு ஓலைச்சுவடிகளில் வாழ்ந்த போதிலும், பின்பு காகிதத்தில் வளர்ந்த போதிலும், அதற்கு முகவுரை தேவைப்படவில்லை. ஆனால், இன்று கணினிக்குள் காலடி பதிக்கும் போது மட்டும், அதற்கு ஒரு முகவுரை தேவைப்படுகிறது. ஏனெனில், சற்றுமுன் வரை, நம் மழலைகளுக்கு அம்புலி காட்டி அமுது ஊட்டும்போதே, ஆத்திச்சூடியால் அறிவும் ஊட்டப்பட்டது. ஆனால், இன்றோ, மழலைகளின் மடியில் கணினி - அதில் காட்டப்படுகிறது அம்புலி. கூரைமேல் உலாவரும் நிலா - அதைப் பாராமல், Google’ல் தேடும் காலம் இதுவல்லவா! நிலவிற்கே தற்போது இணையத்தில் ஒரு முகவரி தேவைப்படுவதால் - இதோ, ஆத்தி்சூடிக்கு எழுதப்படுகிறது ஒரு முகவுரை.

ஔவையார் ஒருவரல்ல பலரென்றும், அவர்களில் யாரால் எப்பொழுது ஆத்தி்சூடி எழுதப்பட்டது என்பது இன்றளவும் விவாதத்திற்கு உரியதாகும். பெரும்பாலும் நம்பப்படுகிற கூற்று, பன்னிரண்டாம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் வாழ்ந்த ஒளவையாரால் எழுதப்பட்டது என்பதே. இன்றும் அதன் சிறப்பு குன்றாமைக்கு காரணம் - அதன்மூலம் செய்யத்தகுந்தவைகளும் செய்யத்தகாதவைகளும் (DO’s & DON’Ts) மிகவும் எளிய முறையில் ஒற்றை வரிகளில் உணர்த்தப்படுகிறது. ‘தொட்டில் பழக்கம் - சுடுகாடு மட்டும்’ என்பதை நன்குணர்ந்தவர் நம் ஒளவைப் பாட்டி. எனவேதான், நமக்கு குழந்தைப் பருவத்திலேயே நல்லன - தீயனவற்றை உணர்த்தி நல்ல பழக்க வழக்கங்களை நம் வாழ்வில் புகுத்திட அவரால் எழுதப்பட்ட சுவடி - ஆத்தி்சூடி.

இந்நூலுக்கு மற்றொரு சிறப்பம்சமும் உண்டு. பொதுவாக, மற்ற மொழிகளை கற்பிக்கும்போது, அதன் எழுத்துக்களை மனதில் பதிய வைக்க ஏதேனும் பொருட்களோடு ஒப்பிடுவர் (A for Apple). ஆனால், ஆத்திச்சூடி மூலம் தமிழ் எழுத்துக்களை கற்பதினால், எழுத்துக்கள் மட்டுமல்ல, நல்ல எண்ணங்களையும் மழலைகள் மனதில் பதிய வைக்க இயல்கிறது. இன்று, இது இணையத்தில் இணைக்கப்படுவதன் நோக்கமும், இது உங்கள் வீட்டுக் குழந்தைகளின் மனதில் சென்றடைய வேண்டும் என்பதுதான். ஒளவையாரின் வரிகள், அவர்கள் வாழ்வில் நல்லன பயக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு மிகவும் உண்டு. நீங்களும் அதே நம்பிக்கையுடன் உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு ஆத்தி்சூடி மூலம் எளிய வழியில் தமிழும் நற்பண்புகளும் கற்றுத் தருவீர்களாக.


Classes
Quiz
Videos
References
Books